Sunday, October 24, 2010

என்னிடமா?

தாங்கவியலா இரைச்சலாய் உன் தனிமை தகிக்கிறது
தனிமையை நீ விரும்பினால் என்னோடு தனித்திரு.
கோபம் வந்ததென்றால் என்னைக் குதறிவிடு.
வருத்தம் வந்துவிட்டால் என்னிடமே கொட்டிவிடு
மெளனம் மட்டுமே விருப்பமென்றால்
அமர்ந்திரு என்னுடன் அமைதியாக
புறக்கணிப்பு என்பதை என்னிடமா காட்டுவது?
ஆயிரம் கைகள் கொண்ட என்னிடம் உள்ள நீ
தண்ணீராய் மாறி நழுவினால் கூட
கடலான என்னுள் கலந்திடவே வேண்டும் நீ.
 புரியாமல்  நீ  மேலே ஆவியாகப் பார்த்தாலும்
வானமான என்னுள்ளே
வசப்படவே போகின்றாய்
எல்லாம் அறிந்து நீ என்னிடம் அமைதிகொள்
எனைப்பிரிய உனக்கிங்கு ஏதும் வழியில்லை.

சுநந்தா.

Wednesday, October 6, 2010

எங்கிருந்தோ வந்தது

இரவு எட்டு மணியில் இருந்து அந்தப் பூனைச்சத்தம். குழந்தை அழுவது போலவே அவ்வப்பொழுது கேட்டுக்கொண்டு இருந்தது. வீட்டைச்சுற்றிப் பூனைகள் நடமாட்டம் எப்போதுமே இருக்கும்தான் என்றாலும் இது மிக அருகில் கேட்டுக் கொண்டு இருந்தது.

தோட்டத்தில் மருதாணிப் புதர்களுக்கு அடியில் டார்ச் வெளிச்சத்தில் எட்டிப் பார்த்தபோது ஒரு பூனைக்குட்டி. அது மிகக் குழந்தைப் பூனையும் இல்லை பெரிய வளர்ந்தபூனையும் இல்லை. ரெண்டும் கெட்டான் வயதில் உருவத்தில் இருந்தது.

நல்ல அழுக்கேறிய கருப்பு நிறம். பச்சைக் கண்கள் மின்ன மேலும் பம்மிக் கொண்டு கத்தியது. ஆரோக்கியமாக இருப்பது போலத் தெரியவில்லை. மிக ஒல்லியாக இருந்தது. பூனைகளுக்கே உரிய பளபளப்பான முடிகள் இல்லை.

வீட்டில் கிளிகள் இருப்பதால் பொதுவாகப் பெரிய பூனைகள் வந்தால் துரத்திவிடுவேன். பூனை வந்தால் கிளிகளும் கத்திக் குமித்து ஊரைக் கூட்டி விடும். ஆனால் இந்தப் பூனை வந்தபோது அமைதியாகப் பேசிக்கொண்டு தான் இருந்தன.

"
எங்க இருந்து வந்த? நாய் எதுகிட்டயாவது கடி வாங்கிட்டயா? உன்னை இந்த ஏரியால பார்த்ததில்லையே.. " என நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் "ங்ய்ய்யாஆஆ" என மட்டும் பதில் சொன்னது.

கொஞ்சம் பாலைக் கிண்ணத்தில் ஊற்றி "சாப்பிடுறயா? பயப்படாம வா" என்று சொல்லிவிட்டுத் தள்ளி நின்றுகொண்டேன். ரொம்ப பயந்து பயந்து இங்கும் அங்கும் யோசனையோடு என்னையும் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டு நடந்து கொண்டு இருந்தது.

பசி அளவுக்கு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிண்ணத்தருகில் போய் குடித்துவிட்டது. கொஞ்சம் பால் மீதமிருந்தது. பூனை கிண்ணத்தருகில் படுத்துக் கொண்டது.

இரவு தூங்குமுன் வெளியே சென்று பார்த்தேன். கிண்ணம் காலியாக இருந்தது. பூனையைக் காணோம். சத்தமும் இல்லை. "அட தெம்பு வந்ததும் போயிடுச்சு போல" என நினைத்தேன்.

காலையில் வாசலுக்கு வந்தபோது மாடிப் படியில் இருந்து "மிய்ய்யாஆஆ" என்றது. .பார்ப்பதற்குக் கொஞ்சம் தெளிவாகியிருப்பது போல் தெரிந்தது. மெல்ல இறங்கி அருகில் வந்து நிமிர்ந்து முகத்தைப் பார்த்தது.

பின்னர் வாலைக் கவனமாக உயரமாகத் தூக்கிக் கொண்டு என் காலில் லேசாக உரசியவாறு சுற்றிச் சுற்றி வந்தது. பின்னர் அதன் குட்டி முகத்தை என் காலில் மெல்ல தேய்த்துக் கொண்டது. இப்படியெல்லாம் செய்ய ஒரு சின்னப் பூனை எங்கே கற்று வந்திருக்கும்?


"நீ இன்னும் போகலயா? இரு. வரேன்.." எனச் சொல்லி அதற்கு சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டுக் கொண்டது. அருகில் அமர்ந்து கொள்ள கைக்கருகில் வந்தது. தடவிக் கொடுத்தால் தலையையும் கழுத்தையும் சாய்த்துக் கொடுத்தது.

இது கம்யூனிகேட் செய்வதைப் பார்த்தால் இப்போதைக்கு இடத்தைக் காலி பண்ணப் போவது போலத் தெரியவில்லை. நான் இதை எத்தனை நாள் தங்க விடப் போகிறேன் அல்லது அது எத்தனை நாள் இங்கு தங்கப் போகிறது எனத் தெரியவில்லை. தங்கினால் நல்லதாகப் பேர் ஒன்று வைக்கவேண்டும்.

சுநந்தா