Sunday, February 28, 2010

கதவும் நானும்

இதோ இப்போது காற்றினால் அறைந்து மூடிய கதவின் வேகம்
அதன் கோபத்தையும் என் கோபத்தையும்
சரியாகக் காட்டுவதாகத் தோன்றுகிறது
அறைக்கதவு மூடிய வேகத்தில் சிதறடிக்கப்பட்டவையும்
என் கோபத்தால் சிதறடிக்கப்பட்டவையும்
மீண்டும் ஒன்று சேர்க்க முடியாத நிலையில்.
அடித்து மூடியபின் அழித்த அகங்காரத்தில்
அமைதியாக நிற்கும் கதவு
கொட்டித் தீர்த்து அமைதியாக நிற்கும் என்னை
புரிந்துகொண்டது போலப் பார்க்கிறது.
“நானாக அறைந்து சாத்தவில்லை உன்னை வேறொன்று
இயக்கியது போல என்னைக் காற்று இயக்கியது.. ” என
எனக்கும் அதற்கும் சாதகமாகப் பேசிக்கொண்டு…
சுநந்தா

Tuesday, February 23, 2010

என் செல்லமே..

2 வயதில்
லிக்விட் சோப்பை வாயில் ஊற்றி
நான் திட்ட திட்ட அழுதுகொண்டு
கழுவ கழுவ சோப்பு நுரை வாயிலிருந்து
வருவது கண்டு கெக்கே பிக்கே
என சிரித்ததும்...

3 வயதில்
சாமிக்கு முன் வைத்திருந்த
மணியைக் கையில் எடுத்துத்
திருப்பித் திருப்பி
ஆட்டிப் பார்த்துவிட்டு
பாட்டரி இல்லாம
எப்படி சத்தம் வருது
என வியந்ததும்..

4 வயதில்
அப்பா விளையாட வரவில்லை என
அவரது எண்ணெய் பாட்டிலில்
தண்ணீர் ஊற்றிவைத்ததும்..

5 வயதில்
தோழியுடன் குளியலறைக்குள்
ஷேவிங் ரேஸரை வைத்து விளையாடி
இருவர் தலையிலிருந்தும்
கொத்துக் கொத்தாக விழுந்து கிடந்த
முடிக்கற்றைகளைப் பார்த்து அதிர்ந்து
போக வைத்தும்..

இதே நீதான் என் செல்லமே
எங்கிருந்து இவ்வளவு அமைதிபெற்றாய்
அளவுக்கதிகமான கதைப்புத்தகங்களும்
விக்கிப்பீடியாக்களும் கம்ப்யூட்டரும்
உன் குறும்புத்தனங்களைக்
கரைத்துக் குடித்து விட்டதா?

12 வயதில் பாட்டியாகிப் போகாதே
உன் புத்தகக் குப்பைகளையும்
வலை உலகையும் விட்டு விலகி
என்னோடு வாயேன்
அந்தப் பட்டுப் பூச்சியையும் பச்சைப் புழுவையும்
குண்டுமல்லிகையையும் குட்டி அணிலையும்
பார்த்துக் கொண்டே தோட்டத்துச்

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

சுநந்தா

Saturday, February 20, 2010

முற்றுப் புள்ளிக்கருகில்..

“முற்றுப் புள்ளி அருகில் நீயும் மீண்டும் சிறு புள்ளியை வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே…” என்ற பாடல் வரி பேருந்தில் பாடிக்கொண்டு இருக்கிறது. இந்த இரவு முழுதும் பயணம் செய்ய மட்டுமே போகிறோம் என உணர்ந்து நல்ல பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டு இருக்கும் போது இந்த வரி மிகஅழகாகத்தான் இருக்கிறது.

ஆனால் நாளை இந்தப் பயணம் முடிந்து விடும். இந்த இரவின் அழகும் அதனுடன் முடியும். அதனால் தானோ என்னவோ இந்த இனிமையை நாம் நினைத்தால் தொடர வைக்க முடியும் என நம்மை ஏமாற்றிக் கொள்வது ஒரு சுகம்.

எல்லா முற்றுப் புள்ளிகளையும் அதுபோலத் தொடர்களாக மாற்றிவிட்டால்..? முடிவின் அழகே போய்விடுமே? எதுவுமே முடியாதே! நினைக்கவே அலுப்பாக இருக்கிறது. புள்ளிகளற்ற நீளமான சொற்குவியல்கள் அல்லது முடிவற்ற பயணங்கள் அல்லது நிறுத்தாத பேச்சுகள் அல்லது தொடர்ந்து கொண்டே இருக்கும் போராட்டங்கள் என எல்லாமே அயரவைக்கின்றன. முற்றுப்புள்ளிக்காக ஏங்க வைக்கின்றன.

ஒரு இனிய நட்புக்கதையோ, காதல்கதையோ, சிறுகதையோ, தொடர்கதையோ, குறுங்கவிதையோ, நாம் நம்மை மறந்து நெகிழ்ந்து நின்ற நிலையோ, தாங்க முடியாத வேதனையில் துடித்த கணமோ, வாழும் வாழ்வோ ஒரு புள்ளியில் முடிவடைவதால் மட்டும்தான் சுவாரசியமாக இருக்கிறது. முற்றுப்புள்ளிகளை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது எனத் தோன்றுகிறது.


-
சுநந்தா