Sunday, July 10, 2011

முடிவோ ஆரம்பமோ வேண்டும்.

கடவுளே எனக்கொரு வழிகாட்டு
ஏதேனும் ஒரு ஆரம்பமோ  அல்லது
முடிவையோ கொடுத்துவிடேன்
இந்தப் பயணம் இலக்கில்லாமல்
எங்கோ செல்வது சலிப்பாயிருக்கிறது
கடுஞ்சுமையாயிருக்கிறது
பாரஞ்சுமந்து செல்லும்போது 
பேச்சுத் துணைக்கு வருவோரும்
அறிவுரை அள்ளித் தெளிப்போரும்
அலுத்து அயர வைக்கிறார்கள்
 தெரிந்தவர்களை அந்நியராகப் பார்ப்பதும்
தெரிந்தும் தெரியாதவர்களைப் போல்
நடந்து கொள்பவர்களை ஏக்கத்துடன் பார்ப்பதும்
எனது வழக்கமாகி இருக்கிறது.
அய்யோ பாவம் எனப் பரிவோடு
வருவோரைஆத்திரத்துடன் பார்க்கிறேன்
யாராலும் உதவ முடியாது..
நன்றாகத் தெரிகிறது.
சுமை இறக்க முடியவில்லை..
சென்று சேருமிடம் தெரியவில்லை
இந்தக் கொழுத்தும் வெயிலில்
சூரியனுக்கு அடியில்
மெதுவாக மூச்சிழுத்து
ஆழமாக உள்ளடக்கி
மூட்டையோடும் வலியோடும்
நடந்தே ஆகவேண்டுமாம்.

சுநந்தா

Sunday, June 5, 2011

மீண்டும் மீண்டும்

மிகக் கவனமாகப் புள்ளிவைத்து
இழைத்துக் கோலமிட்டு முடிந்தவுடன்
தண்ணீரை வாரி இரைத்து அழித்தாலும்
மீண்டும் புள்ளிகளிட்டுத்தொடர்வதும்

பின்னல் வேலைப்பாட்டைச் செய்து முடித்தவுடன்
மிக முக்கியமான ஒற்றை இழையைப்பிடித்து
உருவி ஒன்றுமில்லாமல் ஆக்கினாலும்
மீண்டும் பின்ன ஆரம்பிப்பதும்

எனக்குச் சாத்தியமான ஒன்று என்பதால்தான்
நீ அழித்து நொருக்கிய என்னையும்
முன்பை விட உறுதியாக
உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன்.

சுநந்தா

Monday, April 18, 2011

வாசல் போதும்.

பெருக்குமாறை எடுத்துச்சென்று
வாசலைப் பெருக்கினேன்
எங்கிருந்து வந்தது இவ்வளவு குப்பை
பெருக்கிய வாசல் சுத்தமானதும்
வாசல் சின்னதாய் ஆனதுபோல..
மீண்டும் வீசி வீசி வாரி யெடுத்து
வாசலைப் பெரிதாக்கினேன்
வாசல் கொஞ்சம் பரவாயில்லை
ஆயினும் பத்தாது என
இன்னும் வேகமாகப் பெருக்கி
வீட்டை முறத்தில் அள்ளியெடுத்து
குப்பையில் போட்டதும்
வாசல் அழகு அள்ளிக்கொண்டு போனது.
பெரியதாகக் கோலமிட்டேன்
வீடு எதற்கு வாசல் போதும்.

சுநந்தா

Sunday, February 27, 2011

பொன்வண்டு

பத்து விரல்களையும் இறுகக்கூட்டி
கூடு போலமைத்த உள்ளங்கை சிறையின்
வெற்றிடத்தினுள் குதித்தாடிக்கொண்டும்
ஊர்ந்து சென்றுகொண்டும் உள்ளேயே
பறந்து கொண்டும்  குட்டிப்பொன்வண்டு
சுற்றிவர சிறுமி சிரித்துக் கொண்டிருக்க
முரட்டு விரல்கள் சின்ன விரல்களைப்
பிரித்தெடுத்துப் பொன்வண்டை விடுவிக்க
பறந்து போன வண்டு மீண்டும் குட்டிப்
பூவிரலில் வந்தமர்ந்து கொண்டது
முரட்டுவிரல்கள் திகைத்துத்
தலையிலடித்தபடி போயின.

சுநந்தா