Thursday, September 20, 2018

எழுபதுகளில் பிறந்தவள் 3

எழுபதுகளில் பிறந்த பெண்கள் சாதுரியமானவர்களாகவும் பயந்தவர்களாகவும் இருந்தனர்.

அப்பெண்களின் வீட்டில் பெண்ணுக்கு வரதட்சணை பேரம் நடக்கும். அப்பாவின் முழு சேமிப்பையும் ஆண் மகனைப் பெற்றவர்கள் கேட்பார்கள். எதிர் காலக் கடனில்  மூழ்க வைக்கத் திட்டத்தை விலாவாரியாக சீர் செனத்தி எனக் கூறி பட்டியல் வைப்பார்கள்.    பெண் எதிர்த்துக் கேட்கமாட்டாள். அப்போது அடக்கமான பெண் என்று வேடமிட அவளுக்குத் தெரியும்.

ஒரு பெண் பள்ளியிலும் கல்லூரியிலும் பாரதியார் பற்றிய கட்டுரைகளை வரிந்து வரிந்து எழுதி வீரம் பேசி இருப்பாள்தோழிகளுடன் பெண் விடுதலை பேசித் தள்ளுவாள். ஆனால் வாயைத் திறக்க வேண்டிய இடத்தில் இறுகிக் கொள்வாள்.  பேசினால் பெண்ணை அடங்காதவளாய் வளர்த்ததாகப் பெற்றோரைச் சமூகம் பழிக்கும் என அவளுக்குத் தெரியும்.

சில பெண்கள் விரும்பியே வரதட்சணையை அனுமதித்தார்கள். என்  தந்தை பாசமாக எனக்குத் தானே கொடுக்கிறார். நான் புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் கேட்பதைக் கொடுத்து விட வேண்டும். அதற்கும் மேலே கூடக் கொடுக்கலாம் என யோசித்து வாயைத் திறக்க மாட்டாள்.

இன்னும் சில பெண்கள் திருமணத்துக்குத் தவமிருந்தார்கள்அனைத்து விரதங்களும் அனுஷ்டிக்கப்பட்டது. பெற்றவர்களிடம் இருந்து மீட்டுச் செல்லப்போகும் கணவனைப் பார்க்கும் முன்பே கடவுளாக வரித்துக் கொண்டார்கள்

இன்னும் சில பெண்கள் அனைவர் கண்ணிலும் மண்ணைத்தூவி ரகசியமாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள்அப்போது எல்லாம் காதலிப்பது மிகக் கடினமானது. “சுந்தரபாண்டியன்” படத்தைப் பார்த்தவுடன் என் தோழியிடம் சொன்னேன் “டைரக்டர் நிச்சயம் எழுபதுகளில் பிறந்தவன்” என. அக்காலக் காதல் மிகச் சரியாகச் சொல்லப்பட்டது.  ஆணும் பெண்ணும் இப்போது போலச் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்படாத காலம் அது.  

சமூகம் பொதுவாகக் காதலர்களைக் கல்யாணம் வரை செல்ல விட்டதில்லைகாதலின் போதே கசக்கிவிடும். அப்படியும் போராடி அல்லது வீட்டை விட்டு ஓடித் தாலியுடன் இருந்த இளம் பெண்களை  எழுபதுகளில் பிறந்தோர் வியப்புடன் பார்த்தனர்.

வெற்றிபெற்ற பெண்களாக மட்டும் காதல் திருமணம் முடித்தோர் கருதப்படவில்லை. அந்த ஆண் அவளைப் பணத்திற்காக விற்று விடுவான் என்றோ அல்லது விரைவில் கைவிட்டு விட்டு ஓடி விடுவான் என்றோ சிலர் அதீதமாகப் பயந்தனர். வீட்டில் உள்ள பெண்களையும் பயமுறுத்தினர்

 பாரதிராஜாக்களும் புரட்சிக் கல்யாணம் வரை மட்டுமே படம் எடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்களோ? சமூகம் வாழவிட்டதா என எழுபதுகளில் பிறந்தோருக்குத் தெரிந்ததில்லை. கற்பனைகளிலும் கனவுகளிலும் அதிகமாக வாழ்ந்த அந்தப் பெண்களின் மனதுகளில் 'பயம்' அழகாக வளர்க்கப்பட்டது.


   



 

எழுபதுகளில் பிறந்தவள் 2


எழுபதுகளில் பிறந்தவள் நான்
விழுந்தேன் திருமணம் நடந்தபின்
அன்பு பண்பு பாசம் நேசம் என 
உறவுச் சூழ்நிலை விரித்த வலையில்
நிமிர்ந்து பார்க்குமுன் மூன்று குழந்தைகள் 
ஆத்திகம் பேசி வளர்ந்த பெண் நான்
அம்பிகையிடம் கதறி அழுகிறேன்
தன்மானம் அடையாளம் அனைத்தும் இழந்து
அடிமையாகக் கையேந்திக் கட்டிய கணவனிடம்
பிச்சையாகக் கேட்கிறேன் வீட்டில் அமைதியை.
எக்காளமாகச் சிரிக்கிறான் கூவுகிறான் கொக்கரிக்கிறான்
தன் காலடியில் யாரும் விழுந்து காணாத அவனுக்கு
எனது கதறல் இனிப்பாக இருக்கிறது
தன் முன் வைக்கப்பட்ட படையலாக இருக்கிறது
ஆயிரம் சட்ட திட்டம் வகுக்கிறான்
“அனைத்துக்கும் அடங்கு அல்லது
கூட்டைக் கலைப்பேன்” எனக் கூச்சல் இடுகிறான்
ஆயிற்று
அனைத்துக்கும் ஆடியும் பாடியும் வாடியும் வதங்கியும்
அத்தனை இழுப்புக்கும் போனது வாழ்க்கை
இறுதிச் சுற்று நடக்கிறது
பெண்கள் வளர்ந்து வளர்ந்து விட்டனர்
இன்னும் சில வருடம் மூச்சை அடக்கினால்
“அவ கல்யாணம் செஞ்சு வச்சுக் கடமைய முடிச்சுட்டா”
என யாரோ நால்வர் பேசுவார்கள்
அதற்குள் மூச்சு அடங்கிப் போனால்
“பாவி கடமையை முடிக்காம போயி சேர்ந்துட்டா”
என சில சொற்கள் உதிரும்
மூச்சை இழுத்துச் சுவாசிக்க விரும்பிப்
பிரிந்தால்?.....

என்ன செய்யப் போகிறாய்
எழுபதுகளில் பிறந்தவளே?
அப்பா வளர்த்தெடுத்த சுயம் எங்கே போனது?

ஐந்தாம் வகுப்பிலேயே ஜெயகாந்தனைப் படித்து
வியந்து பாராட்டிய தெளிவு எங்கே
ஜானகிராமனும் பாலகுமாரனும் சுஜாதாவும் சிவசங்கரியும்
விதவிதமாகப் பயப்படத்தான் சொல்லிக் கொடுத்தார்களா?

ஓஷோவும் ஈஷாவும் ஜே.கேயும் புத்தாவும்
மக்காக்கி மந்தமாக்கி மடச்சியாக்கியா சென்றார்கள்?
இல்லை
எழுபதில் பிறந்ததுதான் என் குற்றம்
கற்பனைகளில் வாழும் முறையை
அனைவருமே திணித்துச் சென்றனர்
ஓவெனக் கதறி அழுதுவிட்டு அடுத்த நிமிடம்
கிளிக் கூண்டின் அருகே நின்று  உணவளித்து
உற்றுப் பார்த்துவிட்டு வீட்டு வேலையைத் தொடர்கிறேன்
புரட்சியாவது புடலங்காயாவது?
எழுபதுகளில் பிறந்தவள் நான்
குடும்பம் என்ற மேடையிலே அவன் நல்ல கணவனாய் வேஷம்
போட நான் அவனுக்குக் கொடுத்த கூலி ‘எனது வாழ்க்கை’
போகிறான் போ!


சுநந்தா