Tuesday, December 22, 2009

நிழலுடன் நிஜம்

மஞ்சள் நிறத்தில் மிகச் சிறிய தேன் சிட்டுக்கள் இரண்டு மூன்று வாரங்களாக வீட்டின் பின்புறம் கண்ணாடி பார்த்துப் பார்த்துக் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன. அவை துணி காயப்போடும் கம்பியில் எப்போதும் வாகாக உட்கார்ந்து கொண்டு கண்ணாடி பார்த்துக் கொண்டு இருந்தன.

இறகுகளை விரித்து அழகு பார்த்துக்கொண்டும் அலுத்துப் போய் திரும்பிக் கொண்டும் மீண்டும் கண்ணாடியைக் கொத்தி விளையாடிக் கொண்டும் அநியாயத்துக்கு சத்தமிட்டுக் கொண்டும் இருந்ததை தினமும் ரசித்துக் கொண்டிருந்தோம்.

இரண்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அவற்றில் ஆண்சிட்டு பெண்சிட்டை விட அடர் மஞ்சளில் தலையில் சற்று அழுத்தமான கருப்பு நிறத்துடன் இருந்தது. எனவே இரண்டுக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.

ஆண்சிட்டும் பெண்சிட்டும் கண்ணாடி பார்த்துக் கொள்ளும் போது ‘அருகில் துணையை வைத்துக் கொண்டு ஏன் இப்படி நிழலுக்கு ஆசைப்படுகின்றன? பேசாமல் கண்ணாடியைக் கழற்றிவிடுவோமா’ என்று கூடத் தோன்றியது.

தோழியும் அவ்வப்போது வந்து அவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தாள். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் “எனக்கென்னவோ இது சரியாப்படலை.. உள்ளே இருக்குற ஜோடிக்கு ஆசைப்பட்டு இது இரண்டும் பிரிஞ்சுறப் போகுது பாரேன்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் சொன்னது போலவே நடந்துவிட்டதோ? இந்த வாரம் ஆண் சிட்டுமட்டும்தான் வருகிறது. தானாக வந்து கண்ணாடியில் பார்த்துக் கத்திக் கொண்டு இருக்கிறது.

நிஜமாகவே நிழலுக்கு ஆசைப்பட்டு ஜோடியைப் பிரிந்து விட்டதா அல்லது அதன் துணை இறந்துவிட்டதா எனத் தெரியவில்லை. ஹூம்.... இப்போது கண்ணாடியைக் கழற்றி வைக்க வேண்டுமா? அல்லது அதையாவது பார்த்துக் கொள்ளட்டும் என அப்படியே விட்டு விட வேண்டுமா?
சுநந்தா

Friday, November 27, 2009

ஒளியில் விழுந்து..

விளக்கில் போய் விழும்
விட்டில் பூச்சியாய்
ஒளியில் விழுந்து
விழுந்து சாகிறாய்.
விதி எனச் சொல்லி
மனது தேற்றி மீண்டும்
மீண்டும் சாகாமல்
ஏதோ திசையில்
இருளாக இருப்பினும்
பறந்து பார்த்தால்
பாதை அறியலாம்.


சுநந்தா

Wednesday, November 25, 2009

மெளனமொழி போதும்

உன்னைக் குதறிவிட்டு வலியோடு
அமர்ந்திருக்கிறேன்
பேசாமலே இருந்து விடலாம் என்றும்
பேச்சுகளற்ற மெளனத்துடன்
அருகிருந்தால் போதுமென்றும்
அதைவிட பேசாமல் பார்க்காமல்
இருப்பை உணர்த்த வேறுவழி
இருந்தால் நல்லது என்றும்
நினைத்துக் கொண்டு
நீயும் ஏறக்குறைய எனது
மனநிலையில்தான்
என்னுடன் பேசுமுன்
இருந்தாய் எனத் தெரியும்
அப்படியும் பேசியதால்
உன்னைக் குதறிவிட்டு வலியோடு
அமர்ந்திருக்கிறேன்

 

சுநந்தா

Sunday, November 22, 2009

ஒரு ஓவியம்

அந்த ஓவியன் வரைந்துகொண்டு இருந்தான்
அப்படிச் செய்யாதே இப்படிச்செய்யாதே
எனக் கூறிக்கொண்டே இருந்த
முதியவர்களையும்
மீண்டும் மீண்டும் அப்படியும் இப்படியும்
செய்துகொண்டே இருந்த
சிறுவர்களையும்
அப்படி வரையாதே இப்படி வரையாதே என
அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த
சிறுமியையும்.

சுநந்தா

Wednesday, November 18, 2009

உன்னுடனானது..

மயிலிறகினால்
வானவில்லில் மை எடுத்து
அடர்நீலத்தில் அதிகம் தோய்த்து
பூவிதழில் எழுதிய
மெல்லிய
நேசமும் அதுதான்

சரியாகத் திட்டமிட்டுச்
சிதறிட்ட ஓவியமாய்
கருஞ்சிவப்பாய்
நொருக்கி அழித்த சிற்பமாய்
கனவிலும் வலிக்கின்ற
துரோகமும் அதுதான்
சுநந்தா

Sunday, November 8, 2009

பூனைக்குட்டி

மழையில் நனைந்த
குட்டிப்பூனை
இரண்டு நாட்கள் வீட்டு
விருந்தாளாகியது.
மழை நின்று
வெயில் வந்ததும்
வீட்டுக்கதவுகள்
திறந்தே இருப்பதால் வீட்டு
உறுப்பினராகியது.


சுநந்தா

Friday, November 6, 2009

மறந்து மன்னித்திட

கடந்திட்ட நிகழ்வுகளை
மன்னித்திட மறந்திடவும்
மறந்திட மன்னித்திடவும்
வேண்டுமென அறிவு
அறிவித்தாலும்
செயல்படுத்திடத் திடமின்றி
மறந்தும் மன்னிக்காது
மன்னித்தும் மறக்காது
மனது உடைகிறது

உடையட்டும் என்று
விட்டுவிட்டு விலகி நின்று
கவனித்துப் பார்த்து வந்தால்
ஒருவேளை
மறப்பதற்கோ
மன்னிப்பதற்கோ
எதுவுமே நடக்கவில்லை
என்றுகூட மனம்
உணரக்கூடும்.


சுநந்தா.

Tuesday, November 3, 2009

உன் விழித்துளி..

ஒரு துளி மெதுவாக
மிக மெதுவாக
கண் ஓரத்தில் சேர்ந்து
உருண்டு வடியத் துவங்கி
தன்னைப் பார்த்த விழியில்
நீர் விரைந்து நிறைவது
கண்டு மெல்ல யோசித்து
கன்னத்திலேயே
காய்ந்து விட்டது


சுநந்தா

Monday, November 2, 2009

ரசித்தபோது..

வரிசை வரிசையாய்
அமர்ந்து சினிமா பார்த்தவாறு
கோபப்பட்டு வருத்தப்பட்டு
சந்தோஷப்பட்டு எரிச்சல்பட்டு
துக்கப்பட்டு விதவிதமாக
எல்லாம் பட்டுக்கொண்டு
இருப்பவர்களை படம்
முடியும்வரை ரசித்து ஒரு
திரைப்படமெடுக்க வேண்டும்.


சுநந்தா

Sunday, November 1, 2009

சுயநலம்

நெருக்கமான உறவுகளை
நொறுக்கி
தீயாய் வார்த்தைகளில்
பொசுக்கி
அன்பான அணைப்பை
விலக்கி
ஆதரவுக் கரங்களை
ஒதுக்கி
வாழச் சொல்லிக்கொள்ளும் காரணம்
விரக்தி.


சுநந்தா

Friday, October 30, 2009

சந்தேகமாக

புன்சிரிப்பு உதட்டில் பூசி

கண்களில் பொய்க் கனிவுதீட்டி

மனதையும் மனிதத்தையும்

கழட்டி வைத்துவிட்டு

வெளியில் கிளம்புகிறேன்

வழியில் என்னைச்

சந்திப்பவர்களின் இதயமும்

அவர்களின் கைப்பைகளுக்குள்

மறைந்துள்ளதோ

என சந்தேகம் வருகிறது.


சுநந்தா.

Tuesday, October 27, 2009

நானும் சேர்ந்து..

எங்கும் தெறித்துச் சிதறியபடியும்

எல்லாம் நிறைந்து வழிந்தபடியுமாயுள்ள

உன்நினைவுகளை எல்லாம் அள்ளி அள்ளிச்

சேகரித்து தாவியும் நழுவியும்

ஓடியவற்றையெல்லாம் மீண்டும் ஓடிப்பிடித்து

ஒருவழியாய் மூட்டையாகக்கட்டி

சுமக்கவியலாமல் சுமந்து சென்று

நடுக்கடலில் தூக்கியெரிந்துவிட்டேன்

மூழ்கியது மூட்டையும் நானும்தான்.
சுநந்தா

Thursday, October 8, 2009

மனமூடி..

அறிமுகப் புன்னகை பார்த்தால்
இறுகிக் கொள்ளும் முகம்
யாரைப்பார்த்தும் எதைப்பார்த்தும்
விலகித் தனித்துச் செல்லும் நடை

நீளும் கரம் கண்டால்
கொடுக்கவோ காக்கவோ
நெருங்கவோ நேரிடுமென
மூடிக்கொள்ளும் கரம்

கண்களைப் பார்த்தால்
கருணையோ காதலோ
கவிழ்த்துவிடுமென
கண் தவிர்க்கும் கண்கள்

இத்தனையும் என்னிடத்தில்
இயல்பாகக்கொண்ட நான்
எல்லோரிடமும் புன்னகைத்துக்
கைப்பற்றிக் கண்பார்த்துப் பேசுகிறேன்

மித்ரா

மறக்கமுடியாமல்..

சின்னப்பூனைக்குட்டி மெளனமாக மடியில்
விரிந்த கண்களும் சின்ன முகமும்,
மென்மையான உடம்பும் பஞ்சுப்பாதமும்
என் விரல் தடவும் போது
வளைந்து கொடுக்கும் பரிவும்
எதையோ நினைக்கவைக்க
மடியிலிருந்து இறக்கி விட்டு
'ஓடிப்போ எல்லாம் வேஷம்"
என விரட்டி விட்டேன்.
 
சுநந்தா.

Monday, September 14, 2009

இன்னொரு பட்டாம்பூச்சி

முட்புதருக்குள் மாட்டிய பட்டாம்பூச்சி
இறக்கை விரித்த போதெல்லாம்
முள் பட்டது
முள்ளை விலக்கி விலக்கி
சிறகைப் பற்றி வெளியே
தூக்கினேன் மெல்ல.
'காப்பாற்றியதாக நினைக்காதே
முட்புதரிலிருந்து நானாக மீளும்
அனுபவம் இழந்தேன் உன்னால்.
சுயமுயற்சியைக் கெடுத்த உன்னை
மிக மிக வெறுக்கிறேன்"
சினத்தோடு பறந்து சென்றது.


சுநந்தா

Friday, September 11, 2009

என் நிலையை உன்னில் தேடி..

"என் இடம் எது? உன் வாழ்வில் எனக்கான இடம் எது?" என எப்போதும் தேடும் மனது. ஒவ்வொரு உறவிலும் பாசத்திலும் நேசத்திலும் வெறுப்பிலும் கசப்பிலும் மனது இதைத்தான் யோசிக்கிறது.

என் மேல் அன்பு செலுத்துகிறாயா? நீயா? ஓ அப்படியா? எதுவரை தாங்குவாய்? நான் உன்னை இவ்வளவு இம்சித்தாலும் பிரியாமல் இருப்பாயா? உண்மையாகவா? சோதித்துத் தெரிந்து கொள்கிறேன்..

ஓஒ அடடா உண்மைதான் அவ்வளவு தாங்கி விட்டாயா? ஆகா பாசக்காரன் தான் நீ. ஆனால் ஆனால் அதுதான் உன் எல்லையா அல்லது இன்னும் இம்சையைத் தாங்குவாயா? இரு.. இன்னும் என் எல்லையை விரிவாக்கிச் சோதிக்கிறேன்.. இப்படித்தான் மனம் அலைகிறது.

நானும் நீயும் எதிரியா? சரி எனின் உன் வாழ்வில் நான் எத்தகைய எதிரி? என் இடம் எது. நான் உனக்கான முழு நேர எதிரியா? அல்லது நீ என் முழு நேர எதிரியா? நமது இடத்தைக் குறித்துக் கொள்வோம்.

உன் வாழ்க்கையில் எனக்கான இடம் எது? எனக்காஆஆஆஆன இடம்?
அதை எப்படி நான் அறிந்து கொள்வது?
அது நான் உன்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையிலும் நீ விட்டுக் கொடுக்கும் அளவிலும் அது எனக்கான இடமாகிறதோ?

ஒரு பிறந்த குழந்தை கூட அதன் இடம் என்ன என சோதிக்கிறதே. அழுது ஆர்ப்பாட்டம் செய்து பார்த்து "ம்ம் நம்மைக் கவனிக்கிறார்கள்" அல்லது "ஐயோ நம்மைக் கவனிப்பார் இல்லையே" என அறிந்து கொள்கிறது.
சே என்ன புத்தி இது.

உன்னை அல்லது உங்களை அல்லது அதை அல்லது அவைகளை வைத்து என் நிலையை நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
என் நிலை என்பது எப்போதுமே உன்னை அல்லது வேறொன்றைச் சார்ந்ததா? வேறொன்றை மட்டுமே சார்ந்ததா? குழப்பம்.

எல்லாவற்றுக்கும் காரணம்?
மனதில் எண்ணங்களால் ஏற்பட்ட இடநெருக்கடியா? என் மனதின் ஓரம் சாரம் என எல்லா இடங்களையும் காலி செய்ய வேண்டுமோ? குப்பைத் தொட்டிகளிலேதான் குப்பைகள். சுத்தமாக தெளிவாகத் துடைத்துப் பளிங்குபோல் வைத்தால்?

எதையும் இனி நீயாக நிரப்பாதே காலியாக வைத்திரு போதும்.
சுத்தமான இடங்கள் அற்புதமானவைகளால் நிரப்பப்படும்.


சுநந்தா
 ____________

Wednesday, September 9, 2009

வீட்டில் வளர்த்த பறவை

சிறகுகளை வீசிப்பறக்க
நினைத்தபோதெல்லாம்
வெட்டப்பட்ட சிறகுகள்
கண் முன் பறந்தது போலும்..
அடைத்துப் போடாமலே
அடைந்து கிடந்தது
சிறகிருந்தால் பறக்கலாம்
எனத் தெரியாமல்
சிறகு வளர்ந்த பின்னும்.

சுநந்தா

Monday, September 7, 2009

மாற்றம்

வழுக்கிக் கொண்டு நிதம் எழும் சூரியன் போல எவ்வளவு இயல்பாக சுலபமாக மனிதர்களின் நிறம் மாறுகிறது! எவ்வளவு மாற்றங்கள்!!
உன்னுடய மாற்றம் என்னையும் மற்றவரையும் சேர்த்துப் பாதிக்கும்
என்பதும் அது அடுத்ததையும் மற்றவைகளையும் பாதிக்கும் என்பதும் உனக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் எதும் செய்ய இயலாத நிலைமையா? 


உன்னை சொல்லி என்ன செய்ய? உன்னுடைய மாற்றமே உனக்கு அப்படி வேறொன்றினால் ஏற்பட்ட மாற்றம் காரணமானதாகத்தான் இருக்க வேண்டும். சின்னக் கல் விழுந்த குளம் கூட இயல்பில்
மாறிப்போய் விடுகிறதே. நாடகத்தில் காட்சிகள் மாறுவது கூட ஒரு திட்டமிட்ட ஒழுங்கான அமைப்பில்.. ஆனால் வாழ்க்கையோ
சரசர என ஓடிப் பொலபொலவெனக் கொட்டிக்கொண்டே இருக்கும் அருவி போல மாற்றங்கள் மட்டுமே நிறைந்த கணங்களுடன்..


காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும் இந்தக்கணத்தில் ஏற்கனவே நடந்தவைகளுக்கு அருகாமையிலாவது ஒரு காட்சி அமையட்டுமென எதிர்பார்த்துக்கொண்டு..
சுநந்தா

Wednesday, September 2, 2009

மயக்கம்

வளைந்து ஆடிய பாம்பின்
அழகில் மகுடிக்காரன்
மயங்கி விழுந்தான்

பாம்பு அவனைப்
பொட்டலமாகச் சுருட்டி எடுத்துச்
சென்றது வளைக்குள்

கண் திறந்து பார்த்தவனைப்
பாம்பு மெல்ல முத்தமிட
பாம்பாட்டி நீலமானான்

திக்கித் திணறிக் கைகூப்பி
கடவுளிடம் கத்தினான்
'மன்னித்திடு இவ்வழகிய பாம்பை'.
சுநந்தா