Sunday, October 24, 2010

என்னிடமா?

தாங்கவியலா இரைச்சலாய் உன் தனிமை தகிக்கிறது
தனிமையை நீ விரும்பினால் என்னோடு தனித்திரு.
கோபம் வந்ததென்றால் என்னைக் குதறிவிடு.
வருத்தம் வந்துவிட்டால் என்னிடமே கொட்டிவிடு
மெளனம் மட்டுமே விருப்பமென்றால்
அமர்ந்திரு என்னுடன் அமைதியாக
புறக்கணிப்பு என்பதை என்னிடமா காட்டுவது?
ஆயிரம் கைகள் கொண்ட என்னிடம் உள்ள நீ
தண்ணீராய் மாறி நழுவினால் கூட
கடலான என்னுள் கலந்திடவே வேண்டும் நீ.
 புரியாமல்  நீ  மேலே ஆவியாகப் பார்த்தாலும்
வானமான என்னுள்ளே
வசப்படவே போகின்றாய்
எல்லாம் அறிந்து நீ என்னிடம் அமைதிகொள்
எனைப்பிரிய உனக்கிங்கு ஏதும் வழியில்லை.

சுநந்தா.

Wednesday, October 6, 2010

எங்கிருந்தோ வந்தது

இரவு எட்டு மணியில் இருந்து அந்தப் பூனைச்சத்தம். குழந்தை அழுவது போலவே அவ்வப்பொழுது கேட்டுக்கொண்டு இருந்தது. வீட்டைச்சுற்றிப் பூனைகள் நடமாட்டம் எப்போதுமே இருக்கும்தான் என்றாலும் இது மிக அருகில் கேட்டுக் கொண்டு இருந்தது.

தோட்டத்தில் மருதாணிப் புதர்களுக்கு அடியில் டார்ச் வெளிச்சத்தில் எட்டிப் பார்த்தபோது ஒரு பூனைக்குட்டி. அது மிகக் குழந்தைப் பூனையும் இல்லை பெரிய வளர்ந்தபூனையும் இல்லை. ரெண்டும் கெட்டான் வயதில் உருவத்தில் இருந்தது.

நல்ல அழுக்கேறிய கருப்பு நிறம். பச்சைக் கண்கள் மின்ன மேலும் பம்மிக் கொண்டு கத்தியது. ஆரோக்கியமாக இருப்பது போலத் தெரியவில்லை. மிக ஒல்லியாக இருந்தது. பூனைகளுக்கே உரிய பளபளப்பான முடிகள் இல்லை.

வீட்டில் கிளிகள் இருப்பதால் பொதுவாகப் பெரிய பூனைகள் வந்தால் துரத்திவிடுவேன். பூனை வந்தால் கிளிகளும் கத்திக் குமித்து ஊரைக் கூட்டி விடும். ஆனால் இந்தப் பூனை வந்தபோது அமைதியாகப் பேசிக்கொண்டு தான் இருந்தன.

"
எங்க இருந்து வந்த? நாய் எதுகிட்டயாவது கடி வாங்கிட்டயா? உன்னை இந்த ஏரியால பார்த்ததில்லையே.. " என நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் "ங்ய்ய்யாஆஆ" என மட்டும் பதில் சொன்னது.

கொஞ்சம் பாலைக் கிண்ணத்தில் ஊற்றி "சாப்பிடுறயா? பயப்படாம வா" என்று சொல்லிவிட்டுத் தள்ளி நின்றுகொண்டேன். ரொம்ப பயந்து பயந்து இங்கும் அங்கும் யோசனையோடு என்னையும் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டு நடந்து கொண்டு இருந்தது.

பசி அளவுக்கு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிண்ணத்தருகில் போய் குடித்துவிட்டது. கொஞ்சம் பால் மீதமிருந்தது. பூனை கிண்ணத்தருகில் படுத்துக் கொண்டது.

இரவு தூங்குமுன் வெளியே சென்று பார்த்தேன். கிண்ணம் காலியாக இருந்தது. பூனையைக் காணோம். சத்தமும் இல்லை. "அட தெம்பு வந்ததும் போயிடுச்சு போல" என நினைத்தேன்.

காலையில் வாசலுக்கு வந்தபோது மாடிப் படியில் இருந்து "மிய்ய்யாஆஆ" என்றது. .பார்ப்பதற்குக் கொஞ்சம் தெளிவாகியிருப்பது போல் தெரிந்தது. மெல்ல இறங்கி அருகில் வந்து நிமிர்ந்து முகத்தைப் பார்த்தது.

பின்னர் வாலைக் கவனமாக உயரமாகத் தூக்கிக் கொண்டு என் காலில் லேசாக உரசியவாறு சுற்றிச் சுற்றி வந்தது. பின்னர் அதன் குட்டி முகத்தை என் காலில் மெல்ல தேய்த்துக் கொண்டது. இப்படியெல்லாம் செய்ய ஒரு சின்னப் பூனை எங்கே கற்று வந்திருக்கும்?


"நீ இன்னும் போகலயா? இரு. வரேன்.." எனச் சொல்லி அதற்கு சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டுக் கொண்டது. அருகில் அமர்ந்து கொள்ள கைக்கருகில் வந்தது. தடவிக் கொடுத்தால் தலையையும் கழுத்தையும் சாய்த்துக் கொடுத்தது.

இது கம்யூனிகேட் செய்வதைப் பார்த்தால் இப்போதைக்கு இடத்தைக் காலி பண்ணப் போவது போலத் தெரியவில்லை. நான் இதை எத்தனை நாள் தங்க விடப் போகிறேன் அல்லது அது எத்தனை நாள் இங்கு தங்கப் போகிறது எனத் தெரியவில்லை. தங்கினால் நல்லதாகப் பேர் ஒன்று வைக்கவேண்டும்.

சுநந்தா

Monday, August 30, 2010

பட்சியும் பாம்பும்

கொட்டிய மழை வெள்ளத்தில்
அதல
பாதாளத்தில் மாட்டின
அவளதுசெல்லப்
பிராணிகளான
சின்னப்
பட்சியும் பாம்புக்குட்டியும்.
மெல்லக்
கவிழ்ந்து
கண்சுருக்கிப்
பார்த்தபோது
உடலெல்லாம் சிராய்ப்பாக ரத்தம் வழியக்
கிடைத்ததைப்பற்றி
ஏறும் பாம்பும்
எழமுடியாது
என முடிவெடுத்துக்
கண்மூடிப்
படுத்திருந்த பட்சியும்....
உதடுசுழித்துக்
கவலைப்பட்டு
மிகமிகச்
சிரமப்பட்டு
வெளியிலெடுத்தாள்
பட்சியை.
அதற்குள்
தானாகவே மேலேறிய
குட்டிப் பாம்பைத் திரும்பிப் பார்த்தாள்.
மெல்ல அதைக் கையிலெடுத்து
அன்பு முத்தமொன்று இட்டு
"காத்திரு" எனச்சொல்லிக் குழியில்வீசிப்
பட்சியுடன் பறந்து விட்டாள்மீண்டும் குழியில் விழுந்தபாம்பு
அவளது
செய்கையால் அதிர்ந்துபோய்
அப்படியே
செத்தது.
சுநந்தா

Tuesday, August 10, 2010

தன்னிரக்கம்

கையைப் பற்றியபடி ஓடி வந்துகொண்டிருந்த
என்னைக் கூட்டத்தில் உதறிவிட்டு நமக்கிடையில்
இடைவெளி விட்டுத் தூரத்தில் நடக்கிறாய்.
எப்படியும் இந்தப் பாதையில் நடந்து விடுவேன்
எனும் நம்பிக்கையும் உனக்கு உள்ளது போலும்..
அவ்வப் போது திரும்பிப் பார்த்து வருகிறேனா எனக்
கவனத்துடன் உன் கண்கள் என்னைப் பார்க்கின்றன.
அய்யோ என்னால் முடியவில்லை எனக்
குரல் கொடுத்தால் நிற்பாய் நீ எனக்குத் தெரியும்
ஆனால் நான் மாட்டேன்.
உடைந்த காலும் நொருங்கிய நெஞ்சும்
ரணமான இதயமும் கதறச் சொன்னாலும்
திரும்பிப் பார்க்கும் உன் கண்களிடம்
என் கண்கள் மட்டும் "நான் நலம் நீ நட"
என இனி எப்போதும் பொய்யாகச் சிரிக்கும்
கையைப் பற்றியபடி ஓடி வந்துகொண்டிருந்த
என்னைக் கூட்டத்தில் உதறிவிட்டு நமக்கிடையில்
இடைவெளி விட்டுத் தூரத்தில் நடந்து செல்லுமுன்
யோசித்திருக்க வேண்டும் நீ.
சுநந்தா

Thursday, August 5, 2010

பாறை

உடைக்கிறான் அழகான முழுமையான கல்லை
உளியைவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக
உருவம் தருகிறானாம் உயிர் தருகிறானாம்
வலியில் கதறும் கல்லைப் பொருட்படுத்தாமல்
கலைஞனாம்.. சிற்பியாம்.

நான் செதுக்கி முடித்ததும் உன்னைக்
கண்டு ஊரே வியக்கும் அழுது கரையாதே
எனச் சொல்லித்தொடர்ந்து செதுக்குகிறான்
பாறை அழிந்து சிற்பமான பின்னர்
பெருமைப்பட்டுக் கொள்ள பாறைக்கென்ன இருக்கும்?
சுநந்தா

Saturday, July 31, 2010

சொல்லிக்கொடுக்கப்பட்டது 4

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய்
வாசலில் இறங்கும் போதிருந்து
கல்லூரி வரை மொய்க்கும் கண்களும்
கற்றைகற்றையாய் வரும்
காதல் கடிதங்களும்
'நீ மறுத்தால் என்னுயிர் பிரியும்'
எனும் வசனங்களும்
அவளைத் திணறடித்தாலும்
கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன்
அந்தக் கூட்டம் மாயமாய் மறைந்ததால்

அவளுக்கு ஒரு விஷயம்
சொல்லிக்கொடுக்கப்பட்டது.
சுநந்தா

சொல்லிக்கொடுக்கப்பட்டது 3

வறண்டு விரிந்த பாலையில்
வெகு சில மழைத்துளிகள் எதற்காக?
சிறகொடிந்த தனிப் பறவையின் முன்

தானியச் சிதறல்கள் எதற்காக?
இப்படி ஏதேதோ நினைத்துக்கொண்டு
கவிழ்ந்து கவலையில் ஆழ்ந்திருந்தேன்
'உனக்கு வந்த தாங்கமுடியாத துன்பம் எது?'
கேட்டவரை வியப்புடன் பார்த்தேன்
'என் குடும்பத்தினரை விபத்தில் இழந்தது..' என்றபோது
இழந்தும் நீ வாழ்கிறாய்தானே? என்றார்
'உயிர் நட்புகளைப் பிரிந்தது?' கேட்டதும்
'அப்படியும் உன் உயிர் இருக்கிறதே?' என்றார்
'நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டபோது?' என்றேன்
அவற்றையும் தாங்கிக்கொண்டாய்தானே? என்றார்
ஒருவேளை விரிவான பார்வையை எதிர்பார்க்கிறாரோ
என்று 'மக்களின் பசி வறுமை போட்டி பொறாமை
ஏற்றதாழ்வு காணும் போது' என்றேன்
பதிலின்றி சிரித்துக் கொண்டார்
இப்போது எனக்கும் சந்தேகம் வந்தது
'கடும் நோயில் உழன்றேனென்றால்
என்னால் தாங்க முடியாதோ?' என்றேன்
அப்போதும் நீ போராடுவாய்தானே என்றார்
'அப்படியென்றால் எனக்குத் தாங்க முடியாத
துன்பமெது?' அவரிடமே கேட்டேன்
மெல்லச் சொன்னார் 'இதுவரை உனக்கு
அப்படிப்பட்ட துன்பம் வரவில்லை
தாங்க முடியாத துன்பம்
வரும் போது உனக்கு மரணம் வந்திடும்'.
இப்படி எல்லாம் எனக்குச்
சொல்லிக்கொடுக்கப்பட்டது.
சுநந்தா

Wednesday, June 23, 2010

சொல்லிக் கொடுக்கப்பட்டது 2

'சுனாமி' தலைப்பில் படம் வரைந்து தரச் சொன்னாராம் ஆசிரியர்.
காலையில் இருந்து யோசித்துக் கொண்டு இருந்தாள்
'கடலுக்கு அந்த நிறம் அடிக்கவா? இந்த நிறம் அடிக்கவா?
கடலை அசுரன் போலக் காட்டவா?' எனக் கேள்விகள்
'அந்தமான்' சித்தியிடம் தொலைபேசச் சொன்னேன்
சுனாமி பற்றி உண்மைப் படத்தைத் தெரிந்து கொள்ளட்டும் என
பேசி முடித்துவிட்டுக் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்
திக்கித் திணறி "எங்க டீச்சரிடம் என்னால் வரைய முடியாது
என சொல்லி எழுதிக் கொடுங்கள்" எனச் சொல்லிவிட்டு
இன்னும் அழுது கொண்டு இருக்கிறாள்
சித்தியிடம் கேட்டேன் என்ன சொன்னபோது உடைந்தாள் என
என்னிடம் அவர் ஏற்கனவே சொன்னதுதான்...
'எத்தனையோ பேர் கடலிடம் தப்பி ஓடிக்கொண்டு இருந்தபோது
ஒரு தந்தை மகளை இழுத்துக் கொண்டு ஓடினாராம்.
அவர் திரும்பிப் பார்த்தபோது அவரது கையில்
கை மட்டும் இருந்ததாம்'.


 சுநந்தா

Wednesday, June 2, 2010

சொல்லிக்கொடுக்கப்பட்டது. 1

அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுக் கட்டுக் கோபுரத்தை
மகள் அதிசயமாகப் பார்க்க அவள் அழகாகக் கட்டினாள்
கட்டி முடித்துக் கைதட்டி மகிழ்ந்தார்கள்
சிறுமிக்குப் பொறுமையும் கவனமும் சொல்லிக்கொடுக்கப்பட்டது
பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒடிவந்து சரேலெனத்தட்டிவிட்டான்
பொலபொலவென விழுந்தது மாளிகை
கலைக்கும் யாரையும் அவளுக்குப் பிடிப்பதில்லை
சின்னக் குழந்தையாயினும் பெரியவராயினும்.
அப்படியே அவனை அமரவைத்து
“எழுந்து போனால் பின்னிவிடுவேன்” என மிரட்டி
அதைவிடப் பெரிய மாளிகையை
அவனைப் பார்க்கவைத்துக்கொண்டே கட்டினாள்.
“இதையும் நீ உடைத்தால் காலைவரை இங்கேதான்
உட்கார்ந்திருக்க வேண்டும் இதை விடப் பெரிதாகக்
கட்டிக்கொண்டு இருப்பேன்” என்றாள்.
சிறுவன் கட்டி முடிக்கப்பட்டதைக் கவனமாகப் பார்த்து
இரண்டடி எச்சரிக்கையுடன் பின்னால் சென்று
மெதுவாகக் கதவு திறந்து வெளியேறினான்
இப்போதும் சிறுமிக்கு
ஏதோ ஒன்று தெளிவாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

சுநந்தா

Thursday, April 8, 2010

இயலாதபோது..

கயிற்றில் நடக்கும் சிறுமியைப்
பார்த்துப் பதைக்க மட்டுமே
முடிந்ததுபோல
சிறகொடிந்த பறவைக்கு எதையேனும்
செய்யத் தவிக்க மட்டுமே
முடிந்ததுபோல
உறவொன்று மடிவது கண்டு
துடிக்கமட்டுமே முடிகிறது
சுநந்தா

Monday, April 5, 2010

பூ

மலருக்கு வலிமையில்லை
மெல்லிய இதழ் மூடி
பட்டாம்பூச்சியைச் சிறைப்பிடிக்க

சிறைப்பிடிக்காது எனத்தெரிந்து
மலரில் கட்டுண்டுகிடக்கும்
பட்டாம்பூச்சி

கட்டுப்படுத்த முடியாத ஆனால்
கட்டுப்படும் பட்டாம்பூச்சி
வாழும் மலர்.


சுநந்தா

Thursday, March 4, 2010

தேடிக்கொண்டே..

எங்கு தொலைத்தோம்
எப்படித் தொலைத்தோம்
என்று தொலைத்தோம்

கிடைக்கவே கிடைக்காது
என எல்லாக் குறிப்புகளும்
என்னுள் இருந்தும்
இங்குதான்
இப்படித்தான்
இப்போதுதான்
தொலைத்தது போலத்
தேடிக்கொண்டே நான்.


சுநந்தா

Sunday, February 28, 2010

கதவும் நானும்

இதோ இப்போது காற்றினால் அறைந்து மூடிய கதவின் வேகம்
அதன் கோபத்தையும் என் கோபத்தையும்
சரியாகக் காட்டுவதாகத் தோன்றுகிறது
அறைக்கதவு மூடிய வேகத்தில் சிதறடிக்கப்பட்டவையும்
என் கோபத்தால் சிதறடிக்கப்பட்டவையும்
மீண்டும் ஒன்று சேர்க்க முடியாத நிலையில்.
அடித்து மூடியபின் அழித்த அகங்காரத்தில்
அமைதியாக நிற்கும் கதவு
கொட்டித் தீர்த்து அமைதியாக நிற்கும் என்னை
புரிந்துகொண்டது போலப் பார்க்கிறது.
“நானாக அறைந்து சாத்தவில்லை உன்னை வேறொன்று
இயக்கியது போல என்னைக் காற்று இயக்கியது.. ” என
எனக்கும் அதற்கும் சாதகமாகப் பேசிக்கொண்டு…
சுநந்தா

Tuesday, February 23, 2010

என் செல்லமே..

2 வயதில்
லிக்விட் சோப்பை வாயில் ஊற்றி
நான் திட்ட திட்ட அழுதுகொண்டு
கழுவ கழுவ சோப்பு நுரை வாயிலிருந்து
வருவது கண்டு கெக்கே பிக்கே
என சிரித்ததும்...

3 வயதில்
சாமிக்கு முன் வைத்திருந்த
மணியைக் கையில் எடுத்துத்
திருப்பித் திருப்பி
ஆட்டிப் பார்த்துவிட்டு
பாட்டரி இல்லாம
எப்படி சத்தம் வருது
என வியந்ததும்..

4 வயதில்
அப்பா விளையாட வரவில்லை என
அவரது எண்ணெய் பாட்டிலில்
தண்ணீர் ஊற்றிவைத்ததும்..

5 வயதில்
தோழியுடன் குளியலறைக்குள்
ஷேவிங் ரேஸரை வைத்து விளையாடி
இருவர் தலையிலிருந்தும்
கொத்துக் கொத்தாக விழுந்து கிடந்த
முடிக்கற்றைகளைப் பார்த்து அதிர்ந்து
போக வைத்தும்..

இதே நீதான் என் செல்லமே
எங்கிருந்து இவ்வளவு அமைதிபெற்றாய்
அளவுக்கதிகமான கதைப்புத்தகங்களும்
விக்கிப்பீடியாக்களும் கம்ப்யூட்டரும்
உன் குறும்புத்தனங்களைக்
கரைத்துக் குடித்து விட்டதா?

12 வயதில் பாட்டியாகிப் போகாதே
உன் புத்தகக் குப்பைகளையும்
வலை உலகையும் விட்டு விலகி
என்னோடு வாயேன்
அந்தப் பட்டுப் பூச்சியையும் பச்சைப் புழுவையும்
குண்டுமல்லிகையையும் குட்டி அணிலையும்
பார்த்துக் கொண்டே தோட்டத்துச்

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

சுநந்தா

Saturday, February 20, 2010

முற்றுப் புள்ளிக்கருகில்..

“முற்றுப் புள்ளி அருகில் நீயும் மீண்டும் சிறு புள்ளியை வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே…” என்ற பாடல் வரி பேருந்தில் பாடிக்கொண்டு இருக்கிறது. இந்த இரவு முழுதும் பயணம் செய்ய மட்டுமே போகிறோம் என உணர்ந்து நல்ல பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டு இருக்கும் போது இந்த வரி மிகஅழகாகத்தான் இருக்கிறது.

ஆனால் நாளை இந்தப் பயணம் முடிந்து விடும். இந்த இரவின் அழகும் அதனுடன் முடியும். அதனால் தானோ என்னவோ இந்த இனிமையை நாம் நினைத்தால் தொடர வைக்க முடியும் என நம்மை ஏமாற்றிக் கொள்வது ஒரு சுகம்.

எல்லா முற்றுப் புள்ளிகளையும் அதுபோலத் தொடர்களாக மாற்றிவிட்டால்..? முடிவின் அழகே போய்விடுமே? எதுவுமே முடியாதே! நினைக்கவே அலுப்பாக இருக்கிறது. புள்ளிகளற்ற நீளமான சொற்குவியல்கள் அல்லது முடிவற்ற பயணங்கள் அல்லது நிறுத்தாத பேச்சுகள் அல்லது தொடர்ந்து கொண்டே இருக்கும் போராட்டங்கள் என எல்லாமே அயரவைக்கின்றன. முற்றுப்புள்ளிக்காக ஏங்க வைக்கின்றன.

ஒரு இனிய நட்புக்கதையோ, காதல்கதையோ, சிறுகதையோ, தொடர்கதையோ, குறுங்கவிதையோ, நாம் நம்மை மறந்து நெகிழ்ந்து நின்ற நிலையோ, தாங்க முடியாத வேதனையில் துடித்த கணமோ, வாழும் வாழ்வோ ஒரு புள்ளியில் முடிவடைவதால் மட்டும்தான் சுவாரசியமாக இருக்கிறது. முற்றுப்புள்ளிகளை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது எனத் தோன்றுகிறது.


-
சுநந்தா

Friday, January 15, 2010

கிளி ஜோசியம்

வாசலில் கிளி ஜோசியக்காரன். அவனைச் சுற்றிக் கூட்டம். அவன் கிளியிடம் சீட்டை எடுத்துப் போடச்சொல்லிக் கொண்டே கையை ஆட்டிக் கொண்டிருக்க கிளி தலையைச்சாய்த்து அவனது விரல்களைக் கவனித்தவாறு சீட்டுக்களை மேலும் மேலும் எடுத்துப்போட்டுக் கொண்டு இருந்தது.

பாட்டி “கையை ஆட்டாமல் இருய்யா.. அது எதை வேணும்னாலும் எடுக்கட்டும்” எனச் சொல்லிக் கொண்டே இருக்க அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவனுக்குத் திருப்தியான (ஆட்களை எடை போட்டு அவர்களுக்கு ஏற்றார் போல சொல்ல) சீட்டு வரும் போது மட்டும் சைகை செய்ய கிளி அவனிடம் கொண்டுவந்து போட்டுவிட்டு சமர்த்தாக கூண்டுக்குள் சென்றது.

கூட்டத்தில் அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஜோசியம் பார்க்கச் சொல்ல இது போலவே தொடர்ந்து ஜோசியக்காரனும் கிளியும் நடந்து கொண்டார்கள். ஆனாலும் அனைவரும் தொடர்ந்து சிரிப்புடனும் அக்கரையுடனும் பயத்துடனும் சுவாரசியத்துடனும் அவரவர் எதிர்காலம் பற்றி கிளி ஜோசியக்காரனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.


சுநந்தா.