Thursday, September 20, 2018

எழுபதுகளில் பிறந்தவள் 1

 எங்கள் வீட்டில் பெரியார் படம் பெரியதாக அப்பாவுக்காகவும், அழகான முருகன் படம் பூஜை அறையில் அம்மாவுக்காகவும் இருக்கும். சிறு வயதிலேயே "ஏன் என்று கேள்.. எப்படி எனக் கேள்" எனத் தந்தையால் பக்குவப்படுத்தப்பட்ட மனம் கொண்ட எழுபதுகளில் பிறந்தவள் நான்.

 சிறு வயதிலிருந்தே வீட்டில் வாங்கப்பட்ட குமுதம், விகடன், துக்ளக், கல்கண்டு முழுவதையும் 'அட்டை டு அட்டை'  வாசித்தவள். அப்பாவும் அம்மாவும் நல்ல கதைகளின் பக்கங்களைச் சேகரித்துக் கதைகளை வீட்டிலேயே பைண்டு செய்து வைப்பார்கள் . அப்பாவின் அழகான கையெழுத்தில் பெயரும் எண்ணும் எழுதப்பட்டுப் பைண்டு செய்யப்பட்ட புத்தகம் அலமாரியில் அடுக்கி வைக்கப்படும்.

அண்ணனுக்கு எந்த விதத்திலும் நான் குறையாக நடத்தப்பட்டதில்லை. அவன் ஆண் நீ பெண் என பேதம் வீட்டில் இருந்ததில்லை. யார் தவறு செய்தாலும் ஒரே அடிதான். யார் சரியாய் செய்தாலும் ஒரே பாராட்டுதான்.

பொங்கலுக்கு அம்மா மிக மிக அழகாகப் படம் வரைந்து வாழ்த்து அட்டைகள் செய்வார்கள். அப்பாவின் அச்சுக் கோர்த்தது போன்ற  தமிழ் எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்துக்கள் எழுதப்படும். ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் நண்பர்கள் வீட்டுக்கும் விலாசங்கள் உறைகளில் எழுதப்படும்.  நாங்கள் நால்வரும் 'அன்புடன்' கையெழுத்து இடுவோம்.  அப்பாவுடன் சென்று அனைத்தையும் போஸ்ட் செய்து விட்டுத் திரும்புவோம்.

பொங்கல் நெருங்கும் போது வீட்டுக்குப் பொங்கல் வாழ்த்துக்கள் தபால் நிலையத்தில் இருந்து வந்து சேர ஆரம்பிக்கும். அண்ணனுக்கு ரஜினி படங்கள் அதிகம் வரும். எனக்குப் பூக் கொத்துக்கள், பூனைகள் என வந்து சேரும். மிக மிக சந்தோஷமாக சேகரித்து வைப்போம்.

மிட்டாய் கவர்கள், தீப்பெட்டிப் படங்கள், கலர் பாட்டில் மூடிகள், காந்தங்கள், கோலிக்குண்டுகள் என சேகரிப்புகளின் லிஸ்ட் பெரியது. சிகரெட் கவர்களில் சிலவற்றில் ஆங்கில எழுத்துக்கள் இருக்கும் என்றும் அதில் h, m, t என்ற எழுத்துள்ள கவர்களைக் கண்டு பிடித்துக் கொடுத்தால்  HMT Watch கம்பெனிக்காரன் வாட்ச் தருவான் என என் அண்ணன் சொன்ன பொய்யை நம்பி சிகரெட் கவர்களைப் பொறுக்கி வந்து அம்மாவிடம் வாங்கிய அடி இப்போது சிரிப்பைத் தருகிறது.

வீட்டுக்கு எப்போதும் ஏதோ காரணங்களுக்காக உறவினர் வருகை இருந்து கொண்டே இருக்கும். பாட்டிகள், தாத்தா, பெரியப்பா, அத்தைகள் எனப் பலரிடம் இருந்து அற்புதமான கதைகள் கிடைக்கும். சில கதைகள் தொடரும் போட்டுப் பல நாட்களுக்குச் சொல்லப்படும்.   நமது விடுமுறையில் நாமும் உறவினர் வீடுகளுக்குப் போகக் கிடைக்கும்.

விடுமுறைகள் வீணாகப் போனதே இல்லை. விதவிதமான விளையாட்டுக்கள். உண்மையிலேயே பையன்கள்  'ஃபிலிம்' காட்டுவார்கள்.  வெட்டி எறியப்பட்ட ஃபிலிம்  துண்டுகளைப் பொறுக்கி வந்து வீட்டில் இருட்டில் சுவரில் டார்ச் அல்லது ஏதாவது வெளிச்சத்தில்   படம்  காட்டுவார்கள். நான்கைந்து சிவாஜி படம் எம்.ஜி. ஆர். படம், ஜெமினி படங்களை வைத்துக் கொண்டு வெகு நேரத்துக்குக் காக்க வைத்து ஏகப்பட்ட பில்டப் கொடுத்து சுவரில் பெரியதாகக் காட்டுவார்கள்.

சில சமயங்களில் மழைக்கு முன்பாக எங்கள் வீட்டுக்கு அருகில் ஈசல்கள் புற்றில் இருந்து வெளியேறும்.     சில நிமிடங்களில் மொத்தத்தையும் பறவைகள் கொத்திப் போவதை கூட்டமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருப்போம். என் அண்ணனின் நண்பன் ஒருவனுக்கு ஈசல் என்றால் மிகப் பிரியம். அவனை ஓடிப்போய் அழைத்து வருவார்கள். புற்றுக்கு அருகில் உட்கார்ந்து பிடித்துப் பிடித்துக் கொடுப்போம். வேகமாகச் சாப்பிடுவான். ஆச்சரியமாக இருக்கும்.

வீட்டுக்குப் பின் பக்கமாக ஒரு பிள்ளையார் கோயில். கோயிலில் வெள்ளிக்கிழமை பஜனைக்குப் போனால்தான் பூசாரியிடம் இருந்து பொங்கல் கிடைக்கும். கத்திக் கத்திப் பெருமை வாய்ந்த பிள்ளையாரைப் பாடுவோம். ஜான், சாதிக், பாத்திமா, ஜான்சி, ஜோசபின் என எல்லோருமே எங்களுடன் பொங்கல் வாங்கி சந்தோஷமாக உண்பார்கள். மார்கழி மாதம் என்றால் காலையில் அனைவரும் கோயிலில் ஆஜர் ஆகி விடுவோம்.  

விடுமுறையில் மட்டும் விளையாட்டு இல்லை. மாலை முழுவதும் விளையாட்டுத்தான். கூட்டம் கூட்டமாக ஆடும் ஆட்டம். 'கல்லா மண்ணா?' , 'கலர் கலர்', கோலி, கிரிக்கெட், பம்பரம், கண்ணாமூச்சி, நொண்டி,  தாயம், பாம்புக்கட்டம், செஸ், கேரம், சீட்டுக்கட்டு, கிட்டிப்புல் என அத்தனை விளையாட்டுக்கள்.

வீடுகளில் உட்கார்ந்து  கலர்ப்பேப்பர் மடித்து வில்போல் விளக்குமாற்றுக் குச்சியை வளைத்து ஒட்டி நீளமான வால் ஒட்டி பட்டங்கள் செய்தோம். சிலரது பட்டங்கள் தான் பறக்கும். ஓலைகளை அல்லது பேப்பரை மடித்து குண்டூசி அல்லது காக்கா முள்ளைக் குத்திக் காத்தாடிகள் செய்திருக்கிறோம்.
கூட்டாஞ்சோறு சமைத்தும், காசு சேர்த்துத் தேர் செய்தும் விளையாட்டுகள் நடக்கும்.

நட்புக்கள் பிரிதலும் புது நட்புகளின் சேர்க்கையும் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே வந்தது. சில காலத்துக்குப்பின் விளையாட்டுக்கள் அலுக்கத் தொடங்கியது.  சினிமாக் கதைகளும் அரசியல் பேச்சுக்களும் அதிகரிக்கத் தொடங்கியது. பையன்களும் பெண்குழந்தைகளும் பிரிந்து விளையாடத் தொடங்கினோம். பையன்கள் தலைமுடியை அதிகமாகச் சீவ ஆரம்பித்தனர். பெண்கள் கண்ணாடி முன் அதிகநேரம் நிற்க ஆரம்பித்தனர். நாங்கள் எண்பதுகளைக் கடந்து கொண்டு இருந்தோம்.


சுநந்தா




 


No comments:

Post a Comment